இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் கதாநாயகனாக விஷ்ணு விஷாலின் தம்பியான ருத்ரா நடித்துள்ளார். அவருடன் கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். மேலும், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின் பணியாற்றியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் ருத்ரா ஒரு உதவி இயக்குனராக நடித்துள்ளார். அவருக்கு இயக்குனராக மாற வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருப்பதால், பலரிடம் கதையை சொல்லும் ஒரு முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அவர் இயக்குனராக மாறினாரா என்பதை சுவாரஸ்யமாக, பொழுதுபோக்கு முறைபாடுடன் படத்தில் கூறியுள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களான கார்த்தி, வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய கார்த்தி, “ஒரு அண்ணன் இருப்பது எப்போதும் சிறப்பானது. அப்பா கையில் தூக்கி வளர்த்தால், அண்ணன் தோளில் தூக்கி வளர்ப்பார். இந்த வகையில், எனக்கு ஒரு அண்ணன் இருப்பது மிகுந்த அதிர்ஷ்டம். அவரைப் பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் திரையுலகில் அறிமுகமாகும் போது, திரைத்துறையின் மக்கள் எனக்கு அளித்த அன்பை இன்னும் மறக்க முடியாது. அந்த அன்பை, இந்தத் துறையில் புதிதாக நுழையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன்” என தெரிவித்தார்.