ஜூன் மோசஸ் இயக்கத்தில் அறிமுகமாகும் நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பேய் கதை’. இதில் இசையமைப்பாளராக போபோ சசி பணியாற்றியுள்ளார். கலகலப்பும், அதிரடியான அனுபவங்களும் நிறைந்த குதூகலத் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இது ஆகஸ்ட் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பலரும் பேய்களை மையமாகக் கொண்டு கதைகள் சொல்லும் திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதைப்பற்றி “இதன் தலைப்பே ‘பேய் கதை’ என இருப்பது ஏன்? இதன் சிறப்பேது?” எனக் கேட்டபோது, இயக்குநர் கூறியதாவது: “இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் கொண்ட ஒரு திரைப்படம். திகில், நகைச்சுவை, மர்மம் போன்ற கலவையுடன் இருக்கும் இப்படத்தில், எப்போதும் இவ்வகை படங்களில் காணப்படும் ரத்தமும் வன்முறையும் இல்லை. குழந்தைகள் கூட இந்த படத்தை மனமுவந்து பார்க்க முடியும். அவர்களுக்கே இது ஒரு அதிரடியான அனுபவமாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையில் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கதை சொல்வது, அதை விவரிக்கும் முறை, மேலும் தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் புதிய முயற்சிகளைச் செய்துள்ளோம்.
திரையரங்க அனுபவத்திற்கு ஏற்ற வகையில் பல விஷயங்களை புதுமையாக தயாரித்துள்ளோம். குறிப்பாக, எட்டு நிமிடங்களுக்குள் வி.ஆர். மோஷன் (VR motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை இன்று பல குழந்தைகளும் அனுபவித்து வருகின்றனர். எந்த ஒரு பார்வையாளருக்கும் அருவருப்பைத் தூண்டும் காட்சிகள் இல்லாத, அனைவரும் ரசிக்கக்கூடிய பேய் கதை இது,” என இயக்குநர் விளக்கியுள்ளார்.