2000-ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். 2018-ஆம் ஆண்டில் ஹாலிவுட் நடிகரும் பாப் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்க்கை நடத்தி வருகிறார்.
2002-ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் ஜோடியாக தமிழில் “தமிழன்” படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகிற்குத் திரும்பியுள்ளார். இது தெலுங்கு மொழிப் படம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான திட்டங்களை முடிக்க அவர் ஹைதராபாத் சென்றுள்ளார் என்பதும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் பிரபலமான சில்குர் பாலாஜி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள பிரியங்கா, அதன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களுடன், “ஸ்ரீ பாலாஜியின் ஆசீர்வாதத்துடன் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நம் இதயங்களில் அமைதி நிலவட்டும், நம்மைச் சுற்றி செழிப்பு மற்றும் வளம் பெருகட்டும். கடவுளின் அருள் எல்லையற்றது” என உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார்.