லண்டனில் பிறந்தவர் எமி ஜாக்சன். தமிழ்த் திரைப்படமான ‘மதராசபட்டினம்’ மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தாண்டவம்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதற்கிடையில், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்தார். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணம் நடைபெறும் முன்பே கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர், எமி ஜாக்சன் கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு “ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக்” என்ற பெயரிட்டு, எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த எமி, தற்போது திரையுலகில் மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு என் மகனை விட்டு பிரிந்து, முதன்முறையாக வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. எப்போது வீடு திரும்பி மகனை பார்க்கப்போகிறேனோ எனும் ஏக்கம் மிக்க எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் இந்த பிரிவும், சிரமங்களும் அனைத்தும் என் மகனுக்காகவே என்பதை நினைக்கும் போது, அது எனக்கு ஒரு அளவு ஆறுதலாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.