தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக விளங்குபவர் மோகன்லால். அவரின் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி முடிந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால், ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வரவிருக்கும் 27-ஆம் தேதி உலகளவில் ஐமேக்ஸ் திரையில் வெளியிடப்பட இருக்கிறது. மலையாள திரைப்படத்துறையில் முதல் முறையாக ஒரு படம் ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எல் 2 எம்புரான் மலையாளத் திரைத்துறையிலிருந்து ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் முதல் திரைப்படமாக இருப்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஐமேக்ஸ் மற்றும் மலையாள சினிமாவுக்கிடையில் நீண்ட கால உறவுக்கான ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.