சினிமா துறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக நடிகர்களின் சம்பள உயர்வு மற்றும் தயாரிப்பு செலவின் அதிகரிப்பு முக்கிய பிரச்சினைகளாக உருவாகியுள்ளது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சில தீர்மானங்களை எடுத்தது. குறிப்பாக, நவம்பர் 1 முதல் புதிய படங்களின் படப்பிடிப்பை துவங்க மாட்டோம் என்று அறிவித்தனர். தற்போது நவம்பர் நெருங்கி வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் அந்த முடிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், தயாரிப்பு செலவு உயர்ந்து வருவதால் தயாரிப்பாளர்கள் மேலாளர் அளவிற்கு அதிக பணச் சுமையை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையின் அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீள் அமைப்புகள் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். தற்போது தயாரிப்பில் உள்ள படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும், நவம்பர் 1ம் தேதிக்கு பின் புதிய படங்களை தொடங்க வேண்டாம் என தெரிவித்தோம். தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களுடன் இணைந்து செயல்படும் பெப்சி அமைப்பின் பல யூனியன்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இன்னும் சில யூனியன்களுடன் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்து வருகிறது. அதை முழுமையாக்க இன்னும் சில பேச்சுவார்த்தைகள் தேவைப்படுகிறது.
இவ்வாறு அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவுற்ற பிறகே நடவடிக்கையை நடைமுறைப்படுத்த உள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீள் அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டாம் என்பதனை தயாரிப்பாளர்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம். எங்கள் சங்கத்தின் ஒருமைப்பாடு மட்டுமே தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு உதவும். அந்த ஒருமைப்பாட்டை உறுதியாக நிலைநாட்டுவோம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.