இயக்குனர் பா விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் அகத்தியா திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசையில் 1980ஆம் ஆண்டு வெளியான மூடுபனி திரைப்படத்திலிருந்து, என் இனிய பொன்நிலாவே பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது, ஆனால் அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக கூறி சரிகமா ஆடியோ நிறுவனம், அகத்தியா படத்தினை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் இறுதியில், அகத்தியா படத்தில் இந்த பாடலை பயன்படுத்த, தயாரிப்பாளர் 30 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த பாடலுக்கான உரிமை முழுமையாக சரிகமா நிறுவனத்திற்கே சொந்தமானது, இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், அகத்தியா படத்தின் தயாரிப்பு நிறுவனம், அந்த பாடலின் உரிமையை இசையமைப்பாளர் இளையராஜாவிடமிருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது. இருவரும் தங்கள் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கிய நிலையில், வழக்கினை ஆராய்ந்த நீதிமன்றம், உரிமை சரிகமா நிறுவனத்திற்கே உரியது என்பதாக தீர்ப்பு அளித்துள்ளது.