பிரபல இசையமைப்பாளர் டி.பானடி.இமான் இன்று (ஜன.24) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டி.இமான் தனது பிறந்தநாளன்று தன் முழு உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகம் மூலமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “எனது பிறந்தநாளில் உங்கள் நிபந்தனையற்ற அன்புக்காக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் முழு உடல் உறுப்பு தானத்திற்காக என்னைப் பதிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்தப் பதிவுடன் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘தனது இந்த செயல், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என நம்புகிறேன். என் முழு உடலையும் தானமாக அளித்து அதற்கான டோனர் கார்டையும் பெற்றுள்ளேன். நான் உயிரிழந்த பிறகும் என் உடல் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்றால் சந்தோஷம். நாம் இறந்த பிறகும் ஜீவிக்கலாம் என்ற அற்புதமான விஷயத்திற்கு இந்த செயல் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இன்னும் நிறைய பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.