தமிழில் ‘சர்க்கார்’, ‘தர்பார்’ படங்கள் பெரிய வரவேற்பைப் பெறாததால், ஏ.ஆர். முருகதாஸின் திரையுலக பயணம் முடிந்துவிட்டதா? என்று பலர் சந்தேகித்தனர். ஆனால், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராசி’ படத்தை தொடங்கினார். அதே நேரத்தில், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால், ‘மதராசி’ படத்தை விட ‘சிக்கந்தர்’ படத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, முழு கவனத்துடன் விறுவிறுப்பாக அந்த படத்தின் பணிகளை முடித்துள்ளார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மார்ச் 30ம் தேதி (ஞாயிறு), ‘சிக்கந்தர்’ படம் குடி பத்வா மற்றும் யுகாதி பண்டிகை கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக, சல்மான் கானின் குடும்பத்தினர் அனைவரும் சிறப்பு காட்சி மூலம் படத்தை பார்த்து ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு நிகழ்வில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸும் பங்கேற்றுள்ளார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியாத்வாலா தயாரித்துள்ளார். 2014-ல் வெளியான ‘கிக்’ படத்திற்குப் பிறகு, பத்து வருடங்களுக்கு பின்னர் சல்மான் கானை வைத்து அவர் தயாரிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.