கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் நெல்சன். இவற்றில் குறிப்பாக, அவரது கடைசி இரண்டு படங்களுக்கு அவர் தனது ஆரம்ப காலத்தின் இரண்டு படங்களை விடவும் அதிகமான சம்பளத்தை பெற்றுக் கொண்டார். அந்த சம்பளத்தை அவர் திரும்பவும் சினிமாவுக்கே முதலீடாக மாற்றினார்.
இதற்காக, தனது உதவியாளரான சிவபாலன் முத்துக்குமாரை இயக்குநராக அறிமுகப்படுத்தி, தனது நண்பரான கவினை கொண்டு பிளடி பெக்கர் படத்தை தயாரித்தார். இந்தப் படத்துக்கு நெல்சன் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் தீபாவளி திருவிழாவில் வெளிவந்த அமரன் படத்துடன் போட்டி போட முடியாமல், பிளடி பெக்கர் படம் சராசரி வரவேற்பை மட்டுமே பெற்றது. இதனால், திரைப்படம் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நஷ்டம் அடைந்தவர்களுக்கு நெல்சன் தனது சொந்த பணத்தை நஷ்டத்தொகை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இதற்கு முன் தன்னுடைய படத்திற்கு இப்படி வழங்கியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.இதேவேளையில், தியேட்டர் வெளியீட்டில் படம் நஷ்டத்தை சந்தித்தாலும், சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமைகளில் கிடைத்த வருவாய் மூலம் தயாரிப்பாளராக இருந்த நெல்சனுக்கு எந்த வித நஷ்டமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.