பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான படம் ‘ஜாத்’.ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.இப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும் புகார் எழுந்தன. இந்நிலையில், படக்குழு மன்னிப்பு கேட்டு படத்திலிருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ‘படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தக் காட்சி தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. எந்தவொரு மத உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. யாருடைய மனதெல்லாம் புண்பட்டதோ அவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
