ஆந்திராவைச் சேர்ந்த யேடி விஜயலட்சுமி, ‘ரம்பா’ என்ற பெயரில் திரைப்பட உலகில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தெலுங்கு படங்களில் நடித்திருந்த அவர், 1983ஆம் ஆண்டு ‘உழவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்துறையில் முதல் படியாக கால் வைத்தார். அதன்பின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ போன்ற படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்த அனுபவம் பெற்றுள்ளார்.


2010ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகியுள்ளார். தற்போது மூன்று குழந்தைகளின் தாயாக உள்ளார். இடையே சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குழந்தைகள் வளர்ந்ததையடுத்து, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.


இதற்காக தனியாக ஒரு போட்டோஷூட் நடத்தி, புதிய கால்ஷீட் மேலாளரை நியமித்து, நடிப்பு வாய்ப்புகளை தேடி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சினிமா எப்போதும் எனது முதல் காதல். மீண்டும் திரையுலகில் வந்து, ஒரு நடிகையாக சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன். புதிய பரிமாணங்களை ஆராய்ந்து, பார்வையாளர்களுடன் அர்த்தமுள்ள முறையில் இணைவதற்கான, நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்” என ரம்பா தெரிவித்தார்.