தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், தனது 62-வது திரைப்படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘சித்தா’ படத்தின் இயக்குனரான அருண்குமார் இயக்கியுள்ளார். எச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன் மற்றும் சித்திக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த விழாவில் கலந்து கொண்ட விக்ரம் பேசும்போது கூறியதாவது, மலையாள சினிமாவில் முதல் பான் இந்தியா படமாக சாதனை படைக்கும் படம் ‘எல்2 எம்புரான்’ ஆகும் என நம்புகிறேன். ‘வீர தீர சூரன் 2’யும் அதே நாளில் வெளியாகுவதால் மகிழ்ச்சி. நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக மாறி ‘லூசிபர்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தது எனக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது” என்றார்.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ திரைப்படம் 2019-ம் ஆண்டு வெளியானது. அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘லூசிபர்’ என்பது பிருத்விராஜ் இயக்கிய முதல் திரைப்படமாகும். தற்போது அதன் தொடர்ச்சியாக ‘எல்2 எம்புரான்’ என்ற இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படமும் மார்ச் 27-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.