பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இசையில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூலை 10) 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

‘பாகுபலி – தி பிகினிங்’ என வெளியான இந்த முதல் பாகம், இந்திய திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிய இந்த திரைப்படம், ஹிந்தி மொழியில் வடஇந்தியர்களிடமும் பிரபலமானது. அதுவரை ஹிந்தி படங்களே ஆதிக்கம் செலுத்திய இந்திய சினிமாவில், தெலுங்கு படம் ஒன்று 600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.மகிழ்மதி என்ற கற்பனை சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் இருந்த பாகுபலி, கட்டப்பா, தேவசேனா, சிவகாமி தேவி, பல்வால் தேவன் போன்ற கதாபாத்திரங்கள் மக்களின் நினைவில் நீங்கா வகையில் இருக்கின்றன.
இத்திரைப்படம் வெளியாகிய பின், இந்திய திரையுலகத்தில் சரித்திர மற்றும் இதிகாச திரைப்படங்கள் உருவாக்கும் எண்ணம் அதிகரித்தது. பான் இந்தியா திரைப்படமெனும் விஷயத்தை மக்களிடம் கொண்டுவந்த முதல் முக்கியமான படம் இதுதான் எனக் கருதப்படுகிறது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி 1000 கோடிக்கு அதிகமான வசூல் என்ற இமாலய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.