ஏஏஏ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிக்கும் திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. இது நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் ஒரு வீரரின் காதல் கதையை மையமாகக் கொண்டது. இப்படத்தில் கதாநாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். அதுமட்டுமின்றி, அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குநர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் பழநிபாரதி எழுதிய “கொஞ்சி கொஞ்சி பேசவா…” என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய “வல்லினமா மெல்லினமா இடையினமா…” என்ற பாடலையும் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி இஸ்ரத் காதிரி பாடியுள்ளார்.
இந்த இரண்டு பாடல்களும் தனி ஆல்பமாக வெளியிடப்படவுள்ளன. இதனால், இஸ்ரத் பாடியது மட்டுமல்லாமல், படத்தின் மேக்கிங் வீடியோவிற்காக குலுமணாலி மலைப்பிரதேசங்களில் பாடியும் நடித்தும் உள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் கச்சேரிகளில் பாடி வந்த இஸ்ரத், தற்போது சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், சில இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இப்போது முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்.