மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தற்போது மலையாளத் துறையைத் தாண்டி தமிழ் திரைப்படத்துறையிலும் முக்கியமான இயக்குனர்கள் இயக்கும் படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துவருகிறார். இதன் மூலம் அவர் மேலும் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ரசிகர் பட்டாளமும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‛எம்புரான்’ என்ற படத்தில் மஞ்சு வாரியரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சில தொலைக்காட்சிகளில் பேட்டிகளை வழங்கி வருகிறார். அப்போது ஒரு பேட்டியில், “இவ்வளவு புகழ் பெறுவதால் நீங்கள் மக்களிடமிருந்து விலகியிருக்கிறீர்களா?” என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறியதாவது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லலாம். அதுதான் நானும் என் வாழ்க்கையும். குறிப்பாக கேரளாவில் யாருக்கும் நான் பரிச்சயமற்றவள் அல்ல. இரவு, பகல் எப்போது வேண்டுமானாலும் எந்தவொரு வீட்டின் கதவையும் நான் தட்டி, ‘ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கள்’ என்று கேட்டால், அவர்கள் எந்த சந்தேகமுமின்றி எனக்குத் தண்ணீர் தருவார்கள். ‘இவள் யார்?’ என்று கூட அவர்கள் கேட்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.