Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் பாராட்டு என்னை நெகிழ வைத்தது… டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில், நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1ஆம் தேதி வெளியாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கையில் வாழும் தமிழராகச் சசிகுமார் நடித்துள்ள குடும்பம், அங்குள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அதற்குப் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை நகைச்சுவையுடனும் உணர்ச்சிபூர்வமாகவும் இந்த படம் பேசுகிறது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்தப் படம் வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, தினம் தினம் வசூலில் முன்னேறி வருகிறது. இப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கூட ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய இப்படம் இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா, நானி ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பும் இந்தப் படத்தை பாராட்டியுள்ளார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: “முகக்கவசம் அணிந்து என் சொந்த ஊருக்குச் செல்லும்போது ஆட்டோவில் பயணித்தேன். அந்த நேரத்தில் ஆட்டோ டிரைவர் தன்னுடைய யூடியூபில் ‘முகை மழை’ பாடலை இயக்கினார். எனது முகம் உடனே மகிழ்ச்சியுடன் மலர்ந்தது. அவரிடம் ‘இந்தப் படம் பிடித்ததா?’ என நான் கேட்டபோது, அவர் தயக்கம் இன்றி ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை மூன்று முறை திரையரங்கில் பார்த்தேன்’ என்றார். மேலும் தனது கை காண்பித்து ‘இதோ பாருங்கள்! இந்தப் படம் பற்றி பேசினாலே புல்லரிக்கிறது. அந்த அளவுக்கு பிடிக்கும்’ எனக் கூறினார்.

அவரிடம், சசிகுமார் சாரின் கதாபாத்திரம் எவ்வாறு அவரைத் தொட்டது என்று கேட்டபோது, அவரது சொந்த தந்தை குடும்பத்திற்காக கடுமையாக உழைத்தார் என கூறினார். மேலும், தனது தந்தை இப்போது இல்லை என்பதால், இந்தப் படம் பழைய நினைவுகளை மீண்டும் எழுப்பியது என்றும், பேசியபடியே உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இப்படத்தின் இயக்குநர் நான்தான் என்று நான் கூறியதும், அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன், படத்தின் மீது தனது அன்பைக் காட்டினார். அந்த தருணம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. நம் சிறு பங்களிப்பு மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும்போது, அந்த சந்தோஷத்திற்கு ஈடாக ஏதும் இல்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News