சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “அமரன்” திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் “RKFI” (Raaj Kamal Films International) தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.




இப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான முதல் நாளிலேயே ₹42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இதுவரை ₹350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், “அமரன்” படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது, இதனால் அவர் தற்போது பல புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக நேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.