சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரஜினிகாந்த், தற்போது ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கின்றார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். ‘அமரன்’ வெற்றிக் கொண்டாட்ட நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் அடிக்கடி லோகேஷ் கனகராஜை சந்திப்பேன். நானும் அவரும் நண்பர்கள், எப்போதும் சந்தித்து பேசுகிறோம். எனது வீட்டின் எதிரில்தான் ‘கூலி’ படப்பிடிப்பு நடக்கிறது. நான் ‘அமரன்’ படத்தின் புரமோஷன் வேலைகளில் இருந்ததால் அங்கு செல்லவில்லை. ‘கூலி’ படப்பிடிப்புக்கு இனிமேல் செல்ல திட்டமிட்டுள்ளேன். நான் அந்தப் படத்தில் நடிக்கவில்லை; ‘கூலி’ எனது தலைவர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மட்டுமே. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.