தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழித் திரைப்படங்களிலும் நான்கு தலைமுறைகளாக கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி கதாபாத்திரமாகவும், பாகுபலியில் சிவகாமி தேவியாகவும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது. அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

தற்போது ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் நடித்திருந்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே நீளப்படமாக இணைத்து, பாகுபலி எபிக் என்ற தலைப்பில் வரும் 31ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய பேட்டியில் தனது நீண்டகால திரை வாழ்க்கையைப் பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன், மறைந்த நடிகை சவுந்தர்யா குறித்து உருக்கமான நினைவுகளை பகிர்ந்தார். நான் படையப்பா உட்பட பல படங்களில் சவுந்தர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் இனிமையான, குழந்தை போன்ற மனம் கொண்டவர். நான் அவரை முதன்முதலாக சந்தித்தது தெலுங்கு திரைப்படமான அமருவின் படப்பிடிப்பில் தான், அவர் எனக்கு நல்ல நண்பர் என்றார். ரம்யா கிருஷ்ணனும் சவுந்தர்யாவும் இணைந்து படையப்பா, அமரு, மற்றும் ஹலோ பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

