எஸ். சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படம் முழுமையான கோர்ட் டிராமா படமாகும்.படம் குறித்து இயக்குநர் சிவராமன் கூறுகையில், “ஒரு உண்மை சம்பவம் குறித்து என் எடிட்டர் தினேசிடம் பகிர்ந்தபோது, அதைப் படம் எடுக்கலாம் என்றார். ஜட்ஜ் கதாபாத்திரத்துக்கு யாரை அணுகலாம் என்று யோசித்தபோது சோனியா அகர்வால் ஞாபகம் வந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார். சோனியா அகர்வாலின் சகோதரர் சவுரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன்.

இது உயில் (Will) தொடர்பான கதை. பல குடும்பங்களில் உயில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அதைப்பற்றி விழிப்புணர்வு தரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. விக்ராந்த் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடித்துள்ளார். நடிகை அலிகியா பலர் செய்யத் தயங்கிய ரோலை சிறப்பாக செய்துள்ளார். இது சண்டை, துப்பாக்கி சுடும் ஆக்ஷன் படம் அல்ல — உணர்ச்சியை மையமாகக் கொண்ட பீல் குட் படம்,” என்றார்.
நடிகை சோனியா அகர்வால் கூறுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் சிறப்பானது, ஏனெனில் எனது தம்பி சவுரப் அகர்வால் இசையமைத்துள்ளார். அவருக்கும் என்னைப்போலவே மக்களின் ஆதரவு தேவை. இயக்குநர் சிவராமனுடன் முன்பே தனிமை படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் வழக்கறிஞராக இருந்தவர் என்பதால், மக்களின் வாழ்க்கையை நெருங்கிய கோணத்தில் காண்கிறார்.
இந்தக் கதையை அவர் மிகச் சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு எனக்கு இல்லை; காதல் கொண்டேன் ஒரு கோடியில் எடுக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பதை அவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. உறவுகளின் சிக்கல்களையும், ஒரு பெண்ணின் தியாகத்தையும் பேசும் அழகான படைப்பாக இது அமைந்துள்ளது,” என்றார்.