விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான மோனிஷா பிளஸ்சி, பின்னர் ‘மாவீரன்’ படத்தின் மூலம் திரைப்படத்துறையில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அதன்பிறகு, அவர் நடித்த ‘சுழல் 2’ வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திலும், விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து மோனிஷா பிளஸ்சி கூறியதாவது ஒ’மாவீரன்’ படத்தில் நான் நடித்ததை பார்த்த பிறகுதான், ‘சுழல் 2’ தொடருக்காக என்னை தொடர்பு கொண்டார்கள். நான் நடித்த ‘முப்பி’ என்ற கதாபாத்திரத்துக்கு சண்டைக்காட்சிகள் இருந்ததால், நன்றாக பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும், காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறினார்கள். ஆனால், துணிந்து நடிக்க முடிவு செய்தேன். தற்போது அந்தக் கேரக்டர் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது.”
“இதையடுத்து தான் ‘கூலி’ படத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் ‘ஜனநாயகன்’ பட பூஜைக்கு என்னை அழைத்ததையே எனக்கே நம்ப முடியவில்லை. அந்த விழாவில் கலந்து கொண்டது ஒரு வேறு உலகத்திலிருக்கும் அனுபவமாக இருந்தது. விஜய் சார் அருகில் நின்றபோது, அவருடன் ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ‘வாங்க’ என்று கூறினார். ஆனால், அவருடன் நின்றபோது நான் எந்தவொரு ரியாக்ஷனும் காட்ட முடியாமல் போய்விட்டேன். அந்த தருணம் கனவைவிட பெரியதாக இருந்தது. என்றுள்ளார்.