அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ஹீரோவுக்கு, கௌரி கிஷனின் எடை என்ன?” என்று கேள்வி எழுப்பியதில், நடிகை கௌரி கிஷன் கடும் கோபமடைந்தார்.அதற்கு பதிலளித்த கௌரி, “என்னுடைய எடை பற்றி இப்படிப் பட்ட தனிப்பட்ட கேள்விகளை கேட்பது முறையல்ல. நான் 20 கிலோவாக இருந்தாலும், 80 கிலோவாக இருந்தாலும் அது உங்களுக்கு என்ன சம்பந்தம்? அதை ஹீரோவிடம் கேட்க நீங்கள் யார்? என் எடை தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கடும் அதிருப்தியுடன் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறியதாவது “ஆண் நடிகர்களிடம் பத்திரிகையாளர்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதில்லை. ஆனால் நடிகைகளிடம் மட்டும் உடல் சார்ந்த அல்லது தனிப்பட்ட கேள்விகளை கேட்பது ஏன்? இதுபோன்ற கேள்விகளை இயல்பாக்க முயற்சிப்பது தவறு,” என்றார்.
அந்த பத்திரிகையாளர் “வெயிட் தான் கேட்டேன்” என வாதிட்டார்.
அதற்கு கௌரி, “இந்த அரங்கில் இத்தனை பேர் இருக்கிறார்கள், யாரும் அவரின் கேள்வி தவறு என்று சொல்லவில்லை. இங்கு என்னைத் தவிர ஒரு பெண்ணும் இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என வேதனையுடன் கூறினார். அந்த பத்திரிகையாளர் பின்னரும் கௌரியிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

