தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்க நடிகை பாக்யஸ்ரீ களமிறங்கி உள்ளார். மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்க, நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையில் பிறந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். நடிப்பில் ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய திரைப்படத்திலும் முன்னதாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியதாவது, “இவ்வளவு சிறந்த ஒரு அறிமுகம் தமிழில் கிடைத்தது எனக்கு பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் மொழி தெரியாவிட்டாலும், அதை கற்றுக்கொள்வதில் நான் பெரும் முயற்சி எடுத்தேன். இதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமான உயிர்ப்பை கொடுக்க முடிந்தது. ‘காந்தா’ திரைப்படம் வெளியான பிறகு, தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு, இங்கு உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிக்க நான் வாய்ப்பு பெறுவேன் என்று நம்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களில் நடிக்கவும் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறினார்.