தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தவர் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்நிலையில், ‘விலங்கு’ என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்’ படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தையும், ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா, சூரியின் தங்கையாக நடித்துள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது.இந்நிலையில், ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்று, படக்குழுவினரிடம் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நடிகர் சூரி, சிவகார்த்திகேயனை ஆரத்தழுவி கண்ணத்தில் முத்தமிட்டார். இதுகுறித்த பதிவை சூரி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.