கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் சிவராஜ்குமார், 62. இவர் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும் ஆவார். தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர், தனுஷ் உடன் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அவரது பைரதி ரங்கல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. அந்த வெற்றியை கொண்டாடும் விழாவில் பேசிய சிவராஜ்குமார், தனது உடல்நிலை குறித்து சில தகவல்களை பகிர்ந்தார். விரைவில் அறுவை சிகிச்சைக்கு செல்லப்போவதாக அவர் கூறியிருந்தார். இருப்பினும், என்ன பிரச்சினை என்பது குறித்து அவர் வெளிப்படையாக ஏதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு விமானம் மூலம் பயணித்தார். அவருடன் அவரது மனைவி கீதாவும் சென்றார். புளோரிடாவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வரும் 24ஆம் தேதி அவரது அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அந்த அறுவை சிகிச்சையை கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கோபால் நடத்தவுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்தவுடன், அவர் ஒரு மாதம் அமெரிக்காவில் ஓய்வில் இருக்கவுள்ளார். பின் அடுத்த மாத இறுதியில் பெங்களூரு திரும்புகிறார்.