1990களில் தமிழ் திரையுலகில் ‘ஆணழகன்’, ‘காதல் இளவரசன்’ என்று அபிமானத்துடன் அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசன்னா. உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு மிகப்பெரிய நடிகராக உயர்வார் என எழுத்தாளர் சுஜாதா பாராட்டிய ஒரே இளம் நடிகரும் இவர்தான். காரணம் கமல்ஹாசனைப் போல புதிய தொழில்நுட்பங்களையும், புதுமைகளையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளும் திறமையுடையவர் என்பதே.

சிறு வயதிலேயே தொழில்நுட்பங்களில் ஈடுபாடு கொண்ட பிரசாந்த், அரும்பு மீசையுடன் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் ‘சாக்லேட் பாய்’ இமேஜ் மூலம் லட்சக்கணக்கான பெண் ரசிகர்களை கவர்ந்து, நீண்ட காலமாக டாப் ஸ்டாராக நிலைத்து வருகிறார். ‘செம்பருத்தி’, ‘திருடா திருடா’, ‘கல்லூரி வாசல்’, ‘ஜீன்ஸ்’, ‘ஜோடி’, ‘அப்பு’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பைவ் ஸ்டார்’, ‘வின்னர்’, ‘ஷாக்’, ‘லண்டன்’, ‘மம்பட்டியான்’, ‘சாகசம்’, ‘அந்தகன்’ உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு கவனம் பெற்றுள்ளது. பிரபல நடிகர்–இயக்குநர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ‘ஜீன்ஸ்’ படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் அவருக்கே. சுந்தர்.சி இயக்கிய ‘வின்னர்’ படம் அவருக்கு ஆல்செண்டர் ஹிட்டாக அமைந்தது.
திரை வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளைக் கண்ட அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடைகளை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நடிப்பில் தன்னுடைய நிலையை நிலைநிறுத்தினார். கடந்த ஏப்ரலில் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், ‘அந்தகன்’ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்ததோடு, விஜய் வெங்கட் பிரபு கூட்டணியின் ‘கோட்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தெலுங்கில் பாராட்டுகள் பெற்ற ‘கோர்ட்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். மேலும், 17 வயதில் 1990ஆம் ஆண்டு நேற்றைய நாளில் வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், இன்று தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

