நடிகர் மற்றும் நடன இயக்குனராக பலதிறமைகளை கொண்டுள்ள பிரபுதேவா இன்று வரை சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த வாரம் அவர் நடித்த ‘பேட்ட ராப்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மலையாளத் திரையுலகிலும் பிரபுதேவா காலடி எடுத்து வைத்துள்ளார். அங்கு ‘ஹோம்’ படத்தை இயக்கிய ரோஹின் தாமஸ் இயக்கத்தில், ஜெயசூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கதனர் – தி வைல்டு சார்ஸரர்’ படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்தப் படம், அனுஷ்கா திரை அணியில் உள்ள நிலையில், டிசம்பரில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகியுள்ள ‘வுல்ஃப்’ படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த வினு வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதில் ராய்லட்சுமி, அனுசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அம்ரீஷ் அமைத்துள்ளார். இதன் டீசர் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘கொரில்லா’ படத்தை இயக்கிய டான் சாண்டியின் இயக்கத்தில், பிரபுதேவா ரெஜினாவுடன் இணைந்து ‘ஃப்ளாஷ்பேக்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில் பிரபுதேவா ஒரு எழுத்தாளராக நடிக்க, அனுசுயா பரத்வாஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளவரசு, உமா ரியாஸ் உள்ளிட்ட பல புதுமுகங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘டெடி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எஸ். யுவா, இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார்.

இதற்கிடையில், பிரபுதேவா ‘எங் மங் சங்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். லட்சுமி மேனன் இதில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் 1980களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளதுடன், பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடித்துள்ளார். 2020 லாக்டவுன் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனுடன், ‘முசாசி’ என்ற படத்திலும் பிரபுதேவா போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், பினு பாப்பு, மகேந்திரன், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மூணாறு மற்றும் ஶ்ரீலங்காவில் நடைபெற்றது. இந்த படமும் தற்போது ரிலீஸ் ஆக தயாராகியுள்ளது.

அதே சமயம், பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூன் வாக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ‘சிங்கா நல்லூர் சிக்னல்’ என்ற படமும் பிரபுதேவாவின் கைவசம் உள்ளது. இதனை அறிமுக இயக்குநர் ஜே.எம். ராஜா இயக்கி வருகிறார், இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைக்கிறார். ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படத்திற்கு பின், யுவன் பிரபுதேவாவுடன் மீண்டும் இணைவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

மேலும், பிரபுதேவா பாலிவுட்டில் கஜோலுடன் இணைந்து ‘மகாராக்னி – குயின் ஆஃப் குயின்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை அட்லியின் ஆஸ்தான கேமராமானான ஜி.கே. விஷ்ணு செய்து வருகிறார். இதில் நஸ்ரூதின் ஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ஹிமேஷ் ரேஷமையா நடிக்கும் ‘படாஸ் ரவி குமார்’ படத்தில் வில்லனாகவும் பிரபுதேவா நடிக்க உள்ளார். இவ்வாறு சினிமாவில் பிரபுதேவா மிகவும் பிஸியாக, மெளனமாக செயல்பட்டு வருகிறார்.