புஷ்பா 2′ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘ஜவான்’ என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் பெரும் வெற்றியைப் பெற்ற அட்லி, தமிழுக்குப் பிறகு இப்போது தெலுங்கு திரையுலகில் தனது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அல்லு அர்ஜுனும் அட்லியும் இருவரும் மொத்தம் ஆயிரம் கோடி வசூல் செய்த ஹிட் படங்களை வழங்கியிருக்க, இந்நிலையில் இருவரும் இணைவதால் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் பங்களிக்க உள்ள கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலமைப்பிலும் தோற்றத்திலும் பெரும் மாற்றங்களை மேற்கொள்கிறார். இதற்காக, அவருக்கு ஸ்பெஷல் கோச்சாக லாய்டு ஸ்டீவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் வெளிநாட்டு நபராக இருந்தாலும் இந்திய சினிமாவுக்கு புதிதல்ல; ஏற்கனவே ரன்வீர் சிங், மகேஷ்பாபு போன்ற பிரபலங்களுக்கு கோச்சாக பணியாற்றியவர். மேலும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கும் கோச்சாக இருந்தவர் இவரே. தற்போது அல்லு அர்ஜுனுக்காகவும் அவர் பயிற்சி வழங்க உள்ளார்.
இவர் ரக்பி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் தீவிர பயிற்சியைக் கண்டவர் மட்டுமல்லாமல், நீச்சல் மற்றும் கடல் சார்ந்த தொழில்நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றவர். இப்படம் முழுவதும் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து பயிற்சி அளிக்க உள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்டீவன் லாய்டு, அல்லு அர்ஜுனுடன் எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.