தமிழ் மொழிக்கான நினைவுச்சின்னம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் தன்னுடைய குழுவுடன் பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் என்பது உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாக தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மொழியாகும். தமிழ்ச் சங்கங்களும், ஆய்வுகளும் இந்த மொழியை மேலும் வலுப்படுத்துவதற்கும் அதன் ஆழத்தையும் செறிவையும் வளர்த்திடுவதற்கும் மிக முக்கியமான பங்காற்றியுள்ளன. தமிழ்ச் சங்கங்களின் இந்த அர்ப்பணிப்பு நமக்குக் காட்டும் ஒரு முக்கிய பாடம் என்னவெனில், நமது பாரம்பரியத் தமிழ் மொழியின் சிறப்புகளை அர்த்தமுள்ள தொடர்புகளின் மூலம் புதிய தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பு நம்மிடமுள்ளது.
இதனை முன்னிட்டு ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு தமிழ் மொழிக்கென ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் மற்ற புதிய வடிவங்களில் கொண்டுவரும் திட்டத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. இந்த நினைவுச்சின்னம் முதலில் டிஜிட்டல் வடிவில் உருவாக்கப்படும். எதிர்காலத்தில், இதற்காக ஒரு கட்டிடமும் கட்டப்பட வாய்ப்பு உள்ளது. இத்திட்டம் குறித்த மேலும் தகவல்களை விரைவில் பகிர உள்ளோம். இந்த முயற்சி அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பெருமையையும் உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.