தமிழில் ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா ஆகிய மூன்று படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த காலகட்டத்தில் இவர்களின் ஜோடி வெற்றிகரமான கூட்டணி என பரவலாக பேசப்பட்டது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஒன்றாக திரையுலகில் முன்னேறியவர்கள். நாங்கள் மூன்று படங்களில் சேர்ந்து நடித்தோம். அவர் டெலிவிஷனில் இருந்து வந்தவர். பின்னர் சினிமாவிற்கு வந்து கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு சிறந்த நிலையை அடைந்திருக்கிறார். நாங்கள் இணைந்து நடித்த படங்களை இன்றும் மக்கள் குறிப்பிடுவதும் பேசுவதும் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது, என்றார்.

மேலும் அவர் பேசுகையில், கல்யாணி பிரியதர்ஷனின் வளர்ச்சி கூட எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது அவரது தந்தை பிரியதர்ஷன்தான். நானும் கல்யாணியும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். லோகா படத்தை பார்த்த பிறகு அவரை நேரடியாகப் பாராட்டினேன். தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற, பெண்மையைக் கொண்டாடும் படங்களின் பட்டியலில் லோகா இடம் பெற்றிருப்பது பெருமையாகும்.
இப்போது பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பல படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் நாயகிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைந்தே உள்ளது. அவர்கள் நடிக்கும் படங்கள் வர்த்தக ரீதியில் மிக உயர்ந்த வசூல் ஈட்டி, ஓட்டுனர் லாபத்தை கொடுத்தால் மட்டுமே அவர்களின் சம்பளமும் அதன் படி உயரும். என் தந்தை தயாரிப்பாளராக இருந்தாலும், நான் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இல்லை என்றார்.

