நாயகனாக நடித்திருக்கும் கவின், தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) எனும் பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல், நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக பணிகள் செய்வதாக வெளிப்படையாக கூறினாலும், நிஜத்தில் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அரசியல்வாதி பவன், தேர்தல் பணிக்காக தொகுதி மக்களுக்குச் செலவிடவிருந்த பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் ஒப்படைக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனது சொந்த சூப்பர் மார்க்கெட்டில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த குழுவொன்று அந்த இடத்திலிருந்து அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது. இந்த கொள்ளைபோன பணத்தை திருப்பிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பை ஆண்ட்ரியா, கவினிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? அதை திருடியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், கதாபாத்திரத்தை எதார்த்தமாகச் செய்ய முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் மட்டுமே அவருடைய நடிப்பு சிறப்பாகப் பிரதிபலிக்கிறது; மேலும், சில காட்சிகளில் மற்றொரு நடிகரின் நடிப்பு பாணியின் சாயல் தெரிகிறது. நாயகியாக நடித்துள்ள ஆண்ட்ரியா, முதல் பார்வையிலேயே வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். குறிப்பாக, வில்லத்தனமான குணத்தை வெளிப்படுத்திய அவரது நடிப்பு இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது.
மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வருபவர் ருஹானி சர்மா; இவர் அழகாக திரையில் தோன்றி சென்று விடுகிறார். அரசியல்வாதியாக நடித்த பவன், கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு, திரைக்கதையின் முன்னேற்றத்துக்கு நல்ல ஆதரவாக அமைந்துள்ளது.
ஒரே இடத்தில் இருந்த பணத்தைத் திருடப்பட்ட பின்னரும் மீண்டும் அதே இடத்திற்குத் திருப்பிக் கொண்டுவரும் சூழ்நிலையை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விகர்ண் அசோக். இப்படம் டார்க் காமெடி வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காமெடி வகையில் வந்திருந்தாலும், இந்த திரைப்படம் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் கலவையான கருத்துகளையே பெற்று வருகிறது.

