லிங்குசாமி இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பையா திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் பின்னர் தெலுங்கில் அவாரா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப்படம் நாளை மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. இதுகுறித்து நடிகர் கார்த்தி தெரிவித்ததாவது: “அவாரா எனக்கெப்போதும் ஒரு சிறப்பு படமாக இருந்துள்ளது. அந்த படத்தின் சார்ட்-டாப்பிங் இசையும், அதற்குக் கிடைத்த அன்பும் இத்தனை ஆண்டுகளாக எனக்குடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது. அதை மீண்டும் திரையரங்குகளில் பார்க்கும் அனுபவம் நமக்கு எல்லோருக்கும் இனிய நினைவுகளை மீட்டுக்கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்த ரீரிலீஸை நடத்திய விநியோகஸ்தர்களுக்கு என் இதயபூர்வ நன்றியும் வாழ்த்துகளும்,” என கூறியுள்ளார்.
மேலும், கார்த்தி நடித்த பையா படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தை புதிதாக எடிட் செய்து, வரும் நவம்பர் 28ஆம் தேதி ரீரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

