மலையாள நடிகை ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ‘ரேச்சல்’ என்ற பான்-இந்தியா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனந்தினி பாலா இயக்கிய இந்த படத்தில் ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹனி ரோஸ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, மலையாள சினிமாவில் நான் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். வினயன் சார் என் கையை பிடித்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர். இன்றைய சூழலில் மலையாள சினிமாவுக்கு நான் தேவையா என்றால், இல்லைதான். நான்தான் அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
சில படங்களில் நடிக்கும்போது, அந்த கதைகளில் கடவுளின் கையெழுத்து இருப்பதை உணர்கிறேன். ‘ரேச்சல்’ அப்படிப்பட்ட ஒரு படம். பெண் மையக் கதை என்றாலும், இது ஒரு முழுக்க வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் என்றார். அதே விழாவில் இயக்குநர் வினயன் பேசும்போது, மலையாள சினிமாவில் அதிக சம்பளம் பெறும் சில நடிகைகள் படங்களில் சம்பாதிப்பதை விட, ஹனி ரோஸ் கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிகம் சம்பாதிக்கிறார். அதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பும், ஆர்வமும் தான், என்று தெரிவித்துள்ளார்.

