ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படத்தின் தலைப்பு நேற்று (நவம்பர் 15) ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டது. ‘வாரணாசி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது அறிமுக போஸ்டர் மற்றும் வீடியோவுடன் வெளியிடப்பட்டது. அதில் காளையின் மீது அமர்ந்து, கையில் திரிசூலம் ஏந்தியபடி வருவது போன்ற காட்சியில் மகேஷ்பாபு இடம்பெற்றிருந்தார். பிரித்விராஜ் ‘கும்பா’, பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ கதாபாத்திரங்களில் நடிப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டது.

விழாவில் பேசிய மகேஷ்பாபு, “என் தந்தை நடிகர் கிருஷ்ணா, ஒரு புராணப்படத்தில் நடிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது நான் சம்மதிக்கவில்லை. ஆனால் இன்று இந்தப் படத்தின் மூலம் அவரது ஆசையை நிறைவேற்றுகிறேன். இன்று அவர் எங்கிருந்தாலும் என் வார்த்தைகளைக் கேட்டு கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். இது என் கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. இந்தப் படத்தின்மூலம் அனைவரையும் பெருமைப்படுத்தப்போகிறேன். குறிப்பாக என் இயக்குநரை. ‘வாரணாசி’ ரிலீஸானதும் இந்தியா முழுவதும் எங்களைப் பார்த்து பெருமைப் படும். இன்றைய விழா தலைப்பு அறிவிப்புக்காக மட்டுமே; ரசிகர்களுக்காக இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்கள் காத்திருக்கின்றன” என்று கூறினார்.
இயக்குனர் ராஜமவுலி பேசுகையில், இந்தப் படத்தின் ஒரு முக்கிய பகுதியாக ராமாயணத்தின் ஒரு காட்சியை எடுத்துள்ளோம். அந்த காட்சியில் மகேஷ்பாபு ‘ராமர்’ வேடத்தில் நடித்தபோது எனக்கு மெய்சிலிர்த்தது. மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா இந்திய சினிமாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர்; தெலுங்கு சினிமாவிலும் பல நுட்பங்களை முதன்முதலாக கொண்டு வந்தவர். இந்த அறிமுக வீடியோவிற்காக மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது 45 ஜெனரேட்டர்கள், 3 பிரமாண்ட கிரேன்கள், நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து 100 அடி ஸ்கீரனில் அதை காண்பிக்க திட்டமிட்டோம். ஆனால் அதை டெஸ்ட் செய்யும்போது சிலர் ட்ரோனில் படம் பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது.
எனக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை கிடையாது.ஆனால் என் தந்தைக்கும் என் மனைவிக்கும் ஆஞ்சநேயரின் மீது மிகுந்த பக்தி உண்டு. இந்த படம் ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் என் சிறுவயது முதல் என்னை பாதித்தவை. அதில் இருந்து ஒரு கதையை இந்தப் படத்தில் பகிர்கிறேன் என்று ராஜமவுலி தெரிவித்தார்.

