முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘நடு செண்டர்’ என்ற வெப் தொடர் வரும் 20ம் தேதியிலிருந்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கூடைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் டிராமாவில், சூர்யா விஜய் சேதுபதியுடன் சூர்யா எஸ்.கே, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப், சிவம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஆஷா ஷரத், கலையரசன், எம். சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
தொடரின் இயக்குநர் நரு நாராயணன் கூறுகையில், ‘நடு செண்டர்’ உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணியை மட்டுமே மையமாகக் கொண்ட கதை அல்ல. அதைவிட அவர்களின் வாழ்க்கை, தனிப்பட்ட போராட்டங்கள், வாழ்க்கைமுறை போன்ற அம்சங்களையும் இந்த தொடர் சொல்லுகிறது எனத் தெரிவித்தார்.
தேசிய அளவிலான 17 வயது கூடைப்பந்து வீரரான பிகே, தவறான நடத்தைக்காக பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறான். வன்முறை, ஒழுக்கக்குறைவு நிறைந்த புதிய பள்ளிக்கு மாற்றப்பட்ட பிகே அங்கு பொருந்த போராடுகிறான். அந்த நேரத்தில் அவனுடைய திறமையைக் கண்டறிந்த வைஸ் பிரின்சிபல் அவனை ஊக்குவிக்க ஆரம்பிக்கிறார்; இதன் மூலம் பிகேவின் வாழ்க்கை மாற்றம் அடைகிறது.
இந்த தொடரில் சசிகுமார் பயிற்சியாளராக நடித்துள்ளார். இளைஞர்களின் எனர்ஜி, விறுவிறுப்பான கதை முன்னேற்றம், விளையாட்டு மனப்பாங்கு, ஒழுக்கம், நோக்கம், அடையாளம் தேடும் இளம் தலைமுறை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தொடராக ‘நடு செண்டர்’ உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

