நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் “சிக்மா” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ஜேசன் சஞ்சயின் இயக்குநராகும் அறிமுக படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது.

அதில் அவர், ஜேசன் சஞ்சய் இயக்குநராகி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே பல நிறுவனங்களும், பிரபல இயக்குநர்களும் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், ஜேசன் சஞ்சய் அந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்தார். அவருக்கு நடிகராக அல்ல, இயக்குநராக சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருந்தது என்றார்.
மேலும், அவரது தந்தை ஒரு பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும், அந்த பெயரின் ஆதரவால் வளர வேண்டும் என அவர் நினைக்கவில்லை. தனது திறமையால், தனியாக ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இது மிகவும் அரிதான மற்றும் பாராட்டத்தக்க குணம். அவரின் முயற்சி, உறுதி ஆகியவை அவரை வெற்றியடையச் செய்வது உறுதி என்று நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

