ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173 வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குகிறார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மிகவும் பிரம்மாண்டமான இந்த கூட்டணி மூலம் ஒரு படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து தான் விலகிவிட்டதாக இயக்குனர் சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் அவர் கூறும்போது, “கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், #தலைவர் 173 என்ற மதிப்புமிக்க படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் இந்தப்படத்தை தயாரிபில் இது உண்மையில் எனக்கு ஒரு கனவு நனவாகும் படம் தான். ஆனால், வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. இந்த இரண்டு ஜாம்பவான்களை, நான் எப்போதும் மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் மனதில் வைத்து போற்றப்படுபவை.
இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் உற்சாகத்தை உயர்த்தும் பொழுதுபோக்குகளைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளிக்கிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

