செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘காந்தா’. இதில் ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
‘காந்தா’ திரைப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதை முதலில் செப்டம்பர் மாதத்திலேயே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா’ திரைப்படம் வெற்றி நடை பெற்றுக் கொண்டிருந்ததால், காந்தா படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது காந்தா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை துல்கர் சல்மானே வெளியிட்டுள்ளார். இதில் துல்கரின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

