இந்த படத்தில் ‘கிஸ்’ என்பது ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைகிறது. கதையை நகர்த்துவதும், ஹீரோவுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்துவதும், அவரின் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருப்பது ‘கிஸ்’ தான். இதனால், இப்படத்தில் ஏராளமான ‘கிஸ்’ காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவை சுவாரஸ்யமாக மட்டுமே இருக்கும். இதை வேறு வகையான ‘கிஸ்’ படமாக எண்ணக்கூடாது. இது முற்றிலும் மாறுபட்ட ‘கிஸ்’ கதையாக அமைகிறது.

சூப்பர் மார்க்கெட் நடத்தும் ஹீரோ கவினுக்கு ஒரு விசேஷமான சக்தி இருக்கிறது. யாராவது இருவர் ‘கிஸ்’ செய்வதை அவர் காணும்போது, அவர்களின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நிகழப்போகிறது என்பதை உடனே அவரது மனதில் தெரிந்துவிடும். ராஜாகாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தாலும், ஒரு புத்தகத்தின் வாயிலாகவும் அந்த சக்தி அவருக்கு கிடைக்கிறது. அந்த திறனை வைத்து காதலர்களை பிரிப்பதே அவரது நோக்கமாகிறது. “நான் ஒருபோதும் யாரையும் காதலிக்க மாட்டேன்” என்கிறார். ஆனால் டான்ஸ் ஸ்கூல் நடத்தும் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ராணியை காதலிக்கத் தொடங்குகிறார். இவர்களுக்குள் ‘கிஸ்’ நிகழ்ந்ததும், ப்ரீத்தியின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதைக் கவின் அறிந்து பயப்படுகிறார். “அது நிகழக்கூடாது” என்கிறார். அதனால் அவர் காதலியை விட்டு விலகுகிறார். கனவில் அவரை துன்புறுத்திய அந்த நிகழ்வு என்ன? இறுதியில் இவர்களின் காதல் வெற்றியடைந்ததா? என்பதைக் கூறும் பேண்டசி கலந்த காதல் கதையாக இந்த படத்தை தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இது அவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
சாதாரண ஆங்கிலோ-இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக கவின் நடிக்கிறார். யாராவது ‘கிஸ்’ செய்யும் காட்சியை அவர் பார்க்கும்போது, அவரது மூளைக்குள் நரம்புகள் விரிந்து, அவர்களின் எதிர்காலம் அவரது மனதில் தோன்றுகிறது. பெரும்பாலும் அது காதலர்களுக்கு எதிரானதாக இருப்பதால், காதலை வெறுக்கிறார். படத்தின் முதல் பாதியில் காதலை பிரிப்பதும், ஹீரோயினை சந்திப்பதும் சுமாராகவே சென்றுவிடுகிறது. ஆனால் காதல் பிரிவுக்குப் பிறகு கவினின் நடிப்பு நன்றாக இருக்கிறது. மிகைப்படுத்தல்கள் இன்றி, இயல்பாகவே நடித்திருக்கிறார். ‘கிஸ்’ சம்பந்தப்பட்ட காட்சிகளும் செம்மையாகவே வந்துள்ளன. குறிப்பாக, அவரது தந்தையின் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் மிகுந்த திறமையுடன் நடித்திருக்கிறார். அவரது நடனமும் நன்றாகவே அமைந்துள்ளது. இருப்பினும், அவரிடமிருந்து எதிர்பார்ப்பது அதிகம்.
கவின்–ப்ரீத்தி அஸ்ராணி காதல் கதை ஒரு பிரத்தியேகமாக அமைய, மற்றொரு பக்கத்தில் அவரது தந்தை ராவ் ரமேஷ், முன்னாள் காதலி கவுசல்யாவுடன் நட்பாக இருப்பதும், அதனால் உருவாகும் பிரச்சனைகளும், கவினின் தாய் தேவயானியின் மனநிலையும் வேறு ஒரு கதையாக உருவாகின்றன. இது மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலோ-இந்தியப் பெண்களாக கவுசல்யா, தேவயானி இருவரும் திரையில் கண்கவர் தோற்றமளிக்கிறார்கள். கவினின் தந்தையாக வரும் ராவ் ரமேஷின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
இப்போது மீண்டும் கவினின் காதல் கதைக்குத் திரும்பினால், ‘கிஸ்’ கனவு காரணமாக காதலியை விட்டு விலகும் கவின், இறுதியில் எப்படி மீண்டும் சேர்கிறார் என்பதே கிளைமாக்ஸ் ஆகிறது. தீ விபத்தை மையமாகக் கொண்ட அந்த கிளைமாக்ஸை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். சிறிதளவு உணர்ச்சி குறைவாக உள்ளது. அதைத்தவிர, கவினுக்கு ஒரு நல்ல படமாகவே அமைந்துள்ளது.