மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த மஞ்சு வாரியர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்குதான் தனது நடிப்பை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அசுரன் படம் மூலம் தமிழிலும் கால் பதித்து, அதன் பின் இங்கும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், அப்போது ஜப்பானில் விடுமுறை அனுபவித்து கொண்டிருந்தார். படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் இடைவெளி கிடைத்ததால் அங்கு சென்றிருந்த மஞ்சு வாரியர், தனது பிறந்த நாளன்று பாரம்பரிய ஜப்பானிய உடையான கிமோனோ அணிந்து, ஜப்பான் சாலைகளில் சுற்றி, கடைகளில் சென்று ஷாப்பிங் செய்தார்.
இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், ரசிகர்கள் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.