சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் அவரது தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மோனிஷா பிளெஸ்சி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். மேலும் தற்போது விஜய்யின் ஜனநாயகன், விஜய் ஆண்டனியின் லாயர் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து கவனம் பெற்றுள்ளார்.

கூலி பட அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், கூலி படத்தில் நடித்தது இப்போதும் கனவு போல இருக்கிறது. படத்தில் ஹாஸ்டல் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எனது நடிப்பை கைதட்டி ரஜினிகாந்த் சார் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். இப்போது விஜய் சாருடன் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளேன். அதோடு விஜய் ஆண்டனி சாரின் லாயர் படத்திலும் நடிக்கிறேன்.
சினிமாவில் நுழைந்த காலத்திலேயே ரஜினி சார், விஜய் சார், சிவகார்த்திகேயன் சார் ஆகிய மூவருடனும் நடித்துவிட்டது பெருமையாக இருக்கிறது. ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. காதல் காட்சிகளில், பாடல்களில் நான் பொருந்துவேனா என்று எனக்கே தெரியாது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நல்ல பெயர் எடுக்க ஆசை. பஹத் பாசில், சாய் பல்லவி ஆகியோருடன் நடிக்க ஆசை. வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றுள்ளார்.