பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நித்தி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில், இப்படத்தை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம், இந்தப் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், “ஜூலை மாத படப்பிடிப்பிற்கான சம்பள விநியோகம் தாமதமாகி விட்டது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதற்கு காரணம், சமீபத்தில் ஏற்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதே. கடந்த 12 மாதங்களில் நாங்கள் தினசரி கூலி தொழிலாளர்களுக்கே 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கியுள்ளோம். தற்போது ஒரு கோடி ரூபாய் மட்டுமே பாக்கி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அந்தத் தொகையையும் இந்த வாரத்துக்குள் வழங்க தீர்மானித்துள்ளோம். ஒவ்வொரு ஊழியரின் கடின உழைப்புக்கான சம்பளம் அவர்களுக்கு மதிப்புடன் சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று விளக்கம் அளித்துள்ளது.