நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், ஷபீர் கள்ளாரக்கல் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சுதீப் எலமோன் மேற்கொண்டுள்ளார். படத்திற்கான தொகுப்புப் பணியை பிரபல எடிட்டராகும் ஏ. ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஹிந்தி பதிப்புக்கு ‘தில் மதராசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, தனது அடுத்தப் படமாக சிவகார்த்திகேயனை நடிக்கவைக்க இருப்பதாக சமீபத்தில் உறுதி செய்துள்ளார். இதற்கிடையில், சிவகார்த்திகேயன் புஷ்கர்-காயத்ரி இயக்குநர் ஜோடியுடன் கூட்டணி சேரவுள்ளார் என்ற வதந்திகளும் பரவி வருகின்றன. மேலும், இந்தப் படத்திற்கான இசையமைப்பாளராக சாம் சி.எஸ் இணைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விஷயங்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவின் சார்பில் வெளியாகவில்லை.