திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் வெளியான ‘லிப்ட்’ மற்றும் ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.
சமீபத்தில், கவின் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதன் படி, தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சதீஷ், இப்படத்தின் மூலம் இயக்குநராக தனது முதல் முயற்சியை மேற்கொள்கிறார். இதில், ‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரீத்தி அஸ்ரானி, கவினுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் முதல் பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த பாடல் வருகிற 30ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.