தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நானி. இவர் கடைசியாக நடித்த ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘ஹிட் 3’ படத்தில் நானி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநரான சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

பிரசாந்தி திபிர்னேனி தயாரித்துள்ள இந்தப் படம், மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரத்தம் கசியும் குற்றவியல் கதையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘ஹிட் 3’ படத்தில் நானி ஒரு காவல்துறையினரின் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘ப்ரேம வெல்லுவா’ என்ற பாடல் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதன் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மும்பையில் படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. அப்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா சர்ப்ரைஸாக நானியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.