சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள பிரமாண்ட தெலுங்கு சரித்திர திரைப்படம் ‛கண்ணப்பா’. இப்படத்தை நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தயாரித்து, தலைமை கதாபாத்திரமாக கண்ணப்பாவாக நடித்துள்ளார். மேலும், பிரீத்தி முகுந்தன், சரத்குமார், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.
மேலும், மோகன்லால், பிரபாஸ், அக் ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விஷ்ணு மஞ்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛கண்ணப்பா’ படத்தின் வெளியீடு தாமதமாக இருப்பதற்காக முதலில் வருந்துகிறேன். இப்படம் எங்கள் குழுவிற்கு ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தை மிக உயர்ந்த தரத்தில் ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்து வருகிறோம். விஎப்எக்ஸ் பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. எங்கள் குழுவினர் விடாமுயற்சி காட்டி பணியாற்றி வருகின்றனர். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.