பான் இந்தியா இயக்குநராக விளங்கும் ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்குப் பிறகு, ஒடிசாவில் மிகப்பெரிய படமாக இது உருவாகி வருகிறது. இதுக்குறித்து ஒடிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“முன்பு, மல்காங்கிரியில் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவின் 29வது திரைப்படம் கோராபுட் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், மேலும் சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ள பிரியங்கா சோப்ரா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

“ஒடிசா மாநிலம், திரைப்பட படப்பிடிப்புக்கு ஏற்ற சிறப்பான இடமாக விளங்குகிறது. இது ஒடிசா சுற்றுலா துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இது ஒரு முக்கியமான திரைப்பட படப்பிடிப்பு தளமாக மாறும். ஒடிசாவின் திறமையை ஆராய்வதற்காக அனைத்து திரைப்படத் துறைகளையும் வரவேற்கிறோம். மேலும், அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதோடு, முழுமையான ஆதரவையும் அளிக்க உறுதியளிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.