தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது விஷ்ணு மஞ்சு இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக கண்ணப்பா உருவாகி வருகிறது. இதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளதுடன், முக்கியமான கதாபாத்திரங்களில் மோகன்லால், அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படத்திற்கான திரைக்கதையை தெலுங்குத் திரைத்துறையில் பிரபலமான தோட்டா பிரசாத் எழுதியுள்ளார்.

தோட்டா பிரசாத், 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாஸின் படத்திற்கும் கதாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது மீண்டும் பிரபாஸுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது தனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது, பிரபாஸ் செய்த ஒரு பெரிய உதவியை பற்றியும் அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

2010-ம் ஆண்டில், நான் மருத்துவ காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போது சிகிச்சைக்காக பெரிய தொகை தேவைப்பட்டது. எந்த வழியிலும் உதவி கிடைக்காத சூழலில், பிரபாஸிடம் உதவி கேட்டேன். உடனே அவர் எனது மருத்துவ செலவுக்காக தேவையான பணத்தையும், மற்ற உதவிகளையும் ஏற்பாடு செய்தார். அதே நாளில் அவரது தந்தை மறைந்திருந்தாலும், அந்த சோகத்திலும் கூட எனது நிலையை மறக்காமல், எனக்கான தொகையை அனுப்பியதோடு, அது எனக்கு கிடைத்ததா எனவும் உறுதி செய்தார்.அப்படி ஒரு பெரிய மனதுடைய நபருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. பிரபாஸைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இந்த உலகம் இன்னும் நல்லதாக இருக்கிறது என்று தோட்டா பிரசாத் கூறினார்.