சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடிகர் பிரித்வி பாண்டியராஜன் இணைந்துள்ளார். பிரித்வி, பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன். கடந்த வருடம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் அவர் இரு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்ததால், தற்போது ‘பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ‘பராசக்தி’ முக்கியமான ஒன்று. இப்படம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்டில்ஸில், சிவகார்த்திகேயன் மற்றும் பிரித்வி இருவரும் அந்தக் காலத்து இளைஞர்களைப் போலவே தோன்றுவதைக் காணலாம்.